நாட்டில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது; வேலைக்கான தகுதி தான் இல்லை – சந்தோஷ் கங்வார்

நாட்டில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடப்பதாகவும், அதனை பெறும் தகுதி திறன் தான் வேலை தேடுபவர்களிடம் இல்லை எனவும் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார சரிவு மற்றும் வேலை வாய்ப்பு இன்மை உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேசம் பரெய்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார், நாட்டில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடப்பதாக தெரிவித்தார். ஆனால் குறிப்பிட்ட வேலைக்கு தேவையான தகுதி தான் வேலை தேடுபவர்களிடம் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

கங்வாரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து டுவிட் பதிவிட்டிருந்த காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, வேலை தேடும் இளைஞர்களை இதுபோல் இழிவுப்படுத்த வேண்டாம் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படவில்லை என குறிப்பிட்ட அவர், இதுவே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் எனவும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது கருத்துக்கு விளக்கம் அளித்த அமைச்சர் சந்தோஷ் கங்வார், “வேலைக்கு ஆட்களை தேடும் நிறுவனங்கள் தான் வேலை தேடுபவர்களுக்கு போதிய திறன் இல்லை என கூறுவதாகவும், வேலைக்கு ஏற்ப பயிற்சியை வழங்க அரசு திறன் பயிற்சி அமைச்சகத்தை திறந்திருப்பதை தெரிவிக்கவே இதனை கூறியதாகவும்” அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே