நம்பிக்கை இழக்க வேண்டாம் என இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே மோடி பேச்சு…

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் நிகழ்வை விஞ்ஞானிகளுடன் இணைந்து பார்க்க பிரதமர் மோடி நேற்று இரவு பெங்களூரு சென்றார்.

அங்கு உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுடன் அமர்ந்து பார்வையிட்ட மோதி, லேண்டர் விக்ரமின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது எடுத்து விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசினார்.

விஞ்ஞானிகள் குறித்து பெருமை கொள்வதாக பின்னர் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். விஞ்ஞானிகள் மிகச் சிறப்பான முறையில் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் இந்தியா பெருமிதம் கொள்ளும் வகையில் மிகச் சிறந்த முறையில் செயலாற்றி வருவதாகவும் அவர் பாராட்டி தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 2 குறித்த தகவல்களை இஸ்ரோ தலைவர் தந்திருப்பதாகவும் நல்லதே நடக்கும் என நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். விண்வெளி திட்டங்களுக்கு தொடர்ந்து கடினமாக உழைப்போம் என்று தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியுள்ளார். இந்நிலையில் காலை 8 மணி அளவில் பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

அப்போது விக்ரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில் சந்திரயான் 2 திட்டத்திற்காக ஒட்டுமொத்த இஸ்ரோ குழுவும் மிகச் சிறந்த அர்ப்பணிப்பு உணர்வையும் துணிச்சலையும் வெளிப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இஸ்ரோ குறித்து பெருமிதம் கொள்வதாகவும் நல்லதே நடக்கும் என நம்புவோம் என்றும் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே