நதி நீர் பிரச்சனை குறித்து தமிழக – கேரள முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை

நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் நாளை சந்தித்து பேச உள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிப்பது, கோவை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை, பரம்பிக்குளம், ஆழியாறு, ஆனைமலையாறு, பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகளில் தண்ணீர் விடுவது ஆகிய பிரச்சனைகளும் இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ளன.

குமரி மாவட்டம் நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவது உள்பட பிரச்சினையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகம் வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நதி நீர்ப் பிரச்சனையை பேசித் தீர்க்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை பினராயி விஜயன் ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை மற்றும் கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு மாநில முதலமைச்சர்களும் சந்தித்து பேச தேதி முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இருவரும் சந்தித்து பேச உள்ளனர்.

திருவனந்தபுரத்திலுள்ள மஸ்கட் நட்சத்திர ஹோட்டலில் நாளை மாலை 3 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.

அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சாய்குமார் ஆகியோரும் செல்கிறார்கள்.

இக்குழுவினருடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

கடந்த 2004 ஆண்டு அப்போதைய முதலமைச்சர்கள் ஜெயலலிதாவும், உம்மன்சாண்டியும் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே