அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பள பாக்கியை தராமல் மோசடி செய்து விட்டதாக நடிகர் ஜெயம் ரவியின் மேலாளர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில், டாப் கார்டு இன்டர்நேஷனல் செக்யூரிட்டி டவர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து நந்தனத்தில் உள்ள நடிகர் ஜெயம் ரவியின் அலுவலகத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருவர் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு பணி செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர்கள் இருவரையும் திடீரென நடிகர் ஜெயம் ரவி வேலையில் இருந்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் 4 மாதங்களாகியும் அவர்களுக்கான சம்பள பாக்கியை தரவில்லை என செக்யூரிட்டி நிறுவனத்தின் மேலாளர் வின்சென்ட் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் ஜெயம்ரவியின் மேலாளர் சேஷகிரியை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.