கடந்த 45 வருடங்களாக தமிழ் சமூகத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் தனது இசை மந்திரத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.
இசை என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தவர் இசைஞானி இளையராஜா என்றால் அது மிகையல்ல.
6 வயது முதல் 60 வயது வரை அனைவரும் தாளம் போட்டு கொண்டாடும் பாடல்களை வழங்கியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
இசையை ரசிக்க உணர்வு போதும், வயது தேவையில்லை. அது உண்மை தான் என்பதை உணர்த்தியவர்.
சோகமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி இவர் பாடலை தான் நம் மனம் தேடும். பல தூங்கா இரவுகளுக்கு உயிர் கொடுத்தவர் இளையராஜா தான்.
அவர் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அவர் குரலும் அவ்வளவு வசீகரம்.
ஜனனி. ஜனனி. என அவர் பாட தொடங்கியதுமே நம்மையும் அறியாமல் நாம் ரசிக்க தொடங்கிவிடுவோம்.
இசைக்கு மொழி இல்லை. அனைத்து தரப்பினரையும் கை சொடுக்கும் நேரத்தில் தனது இசைக்கு அடிமையாக்கும் உலகின் தலைசிறந்த கலைஞன்.
1943-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் ராசய்யாவாக பிறந்த இளையராஜா தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்தவர். சிறந்த பாடகர்.
ஆனால் இதை எல்லாம் தாண்டி அவர் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட.
இளையராஜாவின் சிந்தனைகள், பள்ளி எழுச்சி பாவைப்பாடல்கள் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
பொதுவாக 1980-களில் எல்லாம் ஆண்களின் குரல்களில் தான் படத்தின் முக்கிய பாடல்கள் அமையும்.
ஆனால் அதை மாற்றியமைத்து பெண்களின் குரல்களில் தான் அனைத்து சூப்பர் ஹிட் பாடல்களையும் இசையமைத்தவர்.
அதனால் தானே இவர் இசைஞானியாக இருக்கிறார். தமிழில் கணினி முறை இசையை புன்னகை மன்னன் படத்தின் மூலம் அறிமுகம் செய்தார்.
கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது, டாக்டர் பட்டம், பத்ம பூஷன் என பல விருதுகளை பெற்றவர்.
இசை உலகில் கொடிகட்டிப் பறக்கும் இவரை சர்ச்சைகளும் அவ்வப்போது தொடரும்.
ஆனாலும் அவரை திட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு பின் மன அழுத்தத்தை குறைக்க அவரின் பாடல்களை தேடிக் கேட்பது தான் எதார்த்தம்.
இளையராஜாவின் குரல் தரும் மகிழ்ச்சியை எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாது.
திறமைக்கும் வயதுக்கும் சம்மந்தம் இல்லை தான். 77 வயதிலும் அவர் இசையமைக்கும் படத்திற்காக இன்றும் பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.