நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தை வெளியிட இடைக்கால தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் கதைகளை எழுதி வருவதாகவும் கடந்த 2014 16 ஆம் ஆண்டுகளில் சரவெடி என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கதையின்படி பத்திரிக்கை நிருபரான கதாநாயகன் இந்திய பிரதமரிடம் பேட்டி காணும்போது விவசாயம் நதிநீர் இணைப்பு மற்றும் நதிநீர் பொது பங்கீடு அவற்றின் தன்மை குறித்து எடுத்துரைப்பார் என்றும் இந்த கதையை பிரபல இயக்குநர் கேவி ஆனந்த் அதன் விளைவாக கூறியதாகவும் மனுதாரர் கூறியுள்ளார். கதையை நன்றாக உள்வாங்கிக் கொண்ட கேவி ஆனந்த் எதிர்காலத்தில் கதையை படமாக்கும் போது தனக்கு வாய்ப்பு தருவதாக கூறியதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய சரவெடி கதையை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் காப்பான் என்ற பெயரில் கேவி ஆனந்த் படமாக்கி உள்ளார் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். காப்பான் படத்தில் நதிநீர் இணைப்பு மற்றும் பங்கீடு குறித்தும் விவசாயம் குறித்தும் பிரதமருக்கு பத்திரிகையாளராக நடித்துள்ள ஹீரோ விளக்கம் அளித்ததாகவும் தன்னுடைய கதையை தலைப்பை மாற்றி எடுத்துள்ள இந்த காப்பான் படத்தை இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்றும் மனுதாரர் கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று பட நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி விசாரணையை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.