தேஜாஸ் விமானத்தில் ராஜ்நாத்…

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, எல்சிஏ தேஜாஸ் இலகுரக போர் விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பறந்தார். பெங்களூரில் உள்ள ஹெச்ஏஎல் விமான தளத்தில் இருந்து இயக்கப்பட்ட எல்சிஏ தேஜாஸ் விமானத்தின் பின்னிருக்கையில் அமர்ந்து ராஜ்நாத் சிங் பயணித்தார்.

ஏர்வைஷ் மார்ஷல் நர்மதேஸ்வர் திவாரி விமானத்தை இயக்கினார். இதற்காக விமானி உடையில் கம்பீரமாக நடைபோட்டு வந்த ராஜ்நாத் சிங்கிற்கு, விமானத்தின் இயக்கம் குறித்து விளக்கப்பட்டது.

யாருடைய உதவியும் இன்றி விமானத்தில் ஏறிய ராஜ்நாத், பின்னிருக்கையில் அமர்ந்து சீல் பெல்ட்டுகளை அவரே பொருத்திக் கொண்டார். வெள்ளை நிற ஹெல்மெட், ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து கையசைத்தபடியே புறப்பட்டார்.

சுமார் 30 நிமிடங்கள் தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்த ராஜ்நாத் சிங், தரையிறங்கியபோது புன்னகைத்தபடியே கையசைத்தார்.

இதன் மூலம், தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், போர் விமானத்தில் பயணித்தது திரில்லாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்றார்.

ஹெச்ஏஎல், பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவித்த அவர், போர் விமானங்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இந்தியா உயர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

தேஜாஸ் விமானத்தில் பறந்தபோது, நடுவில் சிறிது நேரம் ராஜ்நாத் சிங் விமானத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்தியதாக டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி குறிப்பிட்டபோது, ராஜ்நாத் சிங் அதை மகிழ்ச்சியுடன் ஆமோதித்தார்.

எல்சிஏ தேஜாஸ் எனக் குறிப்பிடப்படும் இலகு ரக போர் விமானம் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. ஹெச்ஏஎல் எனப்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியும் இணைந்து எல்சிஏ தேஜாஸ் விமானங்களை வடிவமைத்து தயாரிக்கின்றன.

ஒற்றை எஞ்சின் கொண்ட, வால் இல்லாத, போரின்போது பல்வேறு பணிகளில் பயன்படுத்தத் தக்க தேஜாஸ் போர் விமானங்கள் ஒலியின் வேகத்தை விஞ்சி செல்லக்கூடியவை. மணிக்கு ஆயிரத்து 350 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியவை.

இதேபோல, இந்திய கடற்படையில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வடிவிலும் தேஜாஸ் விமானம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *