தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஒதுக்கும் நிதியெல்லாம் எங்கே செல்கிறது?

மத்திய அரசு தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கும் நிதியெல்லாம் எங்கே தான் செல்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

2015 ம் ஆண்டு 8 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான தொகுப்பூதிய அடிப்படையில் தமிழக அரசு மருத்துவமனைகளில், 7 ஆயிரத்து 243 செவியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், பணி நிரந்தரப்படுத்த கோரி 2017 ம் ஆண்டு அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதற்கு தடை கோரிய வழக்கில் செவிலியர்களுடன் 6 மாதங்களில் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க, சுகாதாரத் துறை செயலாளர் தலைமையிலான குழுவிடம், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனிதனியாக கோரிக்கை மனு அளித்தாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்தாகவும் கூறி செவிலியர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மருத்துவ துறையில் உருவாகி வரும் காலியிடங்களுக்கு ஏற்ப செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருவதாகவும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களின் ஊதியமானது 14 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சமவேலை, சம ஊதியம் தொடர்பாக இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என செவிலியர் சங்கம் தெரிவித்தது.

நிதி பற்றாக்குறை இருப்பதாகவும், காலிபணியிடங்கள் உருவாகும் போது செவிலியர்கள் நிரந்தரப்படுத்தப்படுவதாகவும் அரசு தரப்பில், தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கப்படும் டன் கணக்கிலான நிதியெல்லாம் எங்கே தான் செல்கிறது? என கேள்வி எழுப்பினர்.

செவிலியர்கள் ஊதிய பிரச்சனைக்கு தீர்வு காண ஏன் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை? எனவும் வினவிய நீதிபதிகள், சுகாதார துறை செயலாளரின் பதில் மனுவும் தெளிவாக இல்லை எனக் கூறி அரசு பதிலளிக்க கால அவகாசம் வழங்கியதோடு வழக்கை அக்டோபர் 15 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே