தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றுக் கொண்டார். தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர், தமிழிசை சவுந்தரராஜன். இவரை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமித்து, கடந்த 1-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.

தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் சவுகான் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

ஆளுநராக பதவியேற்றதைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் தனது தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தனிடம் ஆசி பெற்றார்.

பதவியேற்பு விழாவில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே