தாக்குதல் நடத்த வந்த ரவுடிகளை எச்சரிக்க காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவராமகிருஷ்ணன். சம்பவத்தின் போது இரவு பணியில் இருந்த அவர் சக காவலர்களுடன் காமராஜர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் இளைஞர்கள் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தார்கள். ‘பொது இடத்தில் மது குடிக்க கூடாது’ என எச்சரிக்கை செய்த உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தியிருக்கிறார்.
ஏற்கனவே போதையில் இருந்த இளைஞர்கள் காவல் அதிகாரியின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இதனால் காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென மூர்க்கமான இளைஞர்கள் கையில் இருந்த ஆயுதங்களால் உதவி ஆய்வாளரை தாக்க வந்ததாக சொல்லப்படுகிறது. நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக உணர்ந்த சிவராமகிருஷ்ணன் கையில் துப்பாக்கியை எடுத்து தயாராக வைத்துக் கொண்டடார், இளைஞர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த அவர் திடீரென வானத்தை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சத்தம் காவல்துறை வாக்கி டாக்கி வழியாக எதிரொலிக்க மதுரை மாநகர காவல் துறையே பரபரப்பானது .
தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் காவல் உதவி ஆய்வாளரிடம் அச்சுறுத்தலில் ஈடுபட்ட ராஜகிருஷ்ணன், ரமேஷ், என்ற இருவரை கைது செய்தார்கள். அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் தலைமறைவாக உள்ள பழனிபாரதி என்பவரை தேடி வருகின்றனர்.