தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.9 லட்சம் மோசடி

சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை அருகே தீபாவளி பண்டு சீட்டு நடத்தி 9 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தாய் மற்றும் மகன்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேணி, கற்பகவிநாயகர் நகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் கடந்த 2017ம் ஆண்டு தீபாவளி பண்டு சீட்டு நடத்தியதன் மூலம்  சுமார் 160 அட்டைதாரரிடம் மாதம் தலா 400 ரூபாய் வீதம் 9 லட்சம் ரூபாய் வரை பணத்தை வசூலித்துள்ளார்.

ஆனால் உறுதி அளித்தபடி  பயனாளிகளுக்கு பட்டாசுகளும், கூடுதல் பணமும் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் பணத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்குமாறு பாண்டியம்மாளுக்கு கெடு விதித்தனர்.

ஆனால் அவர் பணம் தராததை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்த போலீசார் தாய் மற்றும் அவரது மகன்களான சசிகுமார், சதிஷ்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே