திருமணிமுத்தாற்றில் கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள திருமணிமுத்தாறில், வெள்ளப்பெருக்கு காரணமாக, தற்காலிக தரை மண்பாலம் உடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் சுற்றுவட்டாரத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக, திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரை மண் பாலமானது, நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனால், மதியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இவ்வழியே பயணம் செய்ய முடியாமல் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தரைமட்ட பாலம் இதுபோல அடிக்கடி நீரில் அடித்துச் செல்லப்படுவதாக புகார் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆற்று நீரில் ரசாயன கழிவு கலக்கப்படுவதை தடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே