விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், திருமணமாகி 7 நாட்களே ஆன இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் சென்றதால் இந்த சோகம் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்த பொறியாளரான பாலமுருகனுக்கும் செம்படாக்குறிச்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் 7 நாட்களுக்கும் முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
புதன்கிழமை மாலை பாலமுருகன், பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்துள்ளனர்.
மூவருமே தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்தை சந்தோஷ் ஓட்டிவர பின்னால் பாலமுருகனும் அவரையடுத்து பிரியதர்ஷினியும் அமர்ந்து சென்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அம்மன்நகர் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களது வாகனம் மீது மோதியதில், பிரியதர்ஷினி சாலை நடுவேயும் பாலமுருகனும் சந்தோஷும் சாலையோரமும் விழுந்தனர்.
சாலை நடுவே விழுந்த பிரியதர்ஷினி மீது அவ்வழியாக வந்த லாரி ஏறியதில் உடல்நசுங்கி உயிரிழந்தார். பாலமுருகன், சந்தோஷ் மற்றும் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நாராயணன் என்பவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்தது, மூவருமே தலைக்கவசம் அணியாமல் வந்தது என இந்த விபத்தில் விதிமீறல்களின் பங்கு பிரதானமாக இருக்கிறது.
சில நூறு ரூபாய் விலைகொண்ட தலைக்கவசத்தை வாங்கி அணிய மறுப்பதால் விலை மதிப்பே இல்லாத இதுபோன்ற உயிர்கள் பலியாவது தொடர்கதையாகிறது.
அனைத்து தரப்பினருமே இதனை உணர்ந்து போக்குவரத்து விதிகளை கவனத்தோடு கடைபிடிக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.