தமிழில் தப்பும் தவறுமாக மன்னிப்பு கடிதம் எழுதிய சூர்யா ரசிகர்கள்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் சூர்யா ரசிகர்கள் எழுதிய பிழைகள் நிறைந்த மன்னிப்பு கடிதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் , இனி யார் ‘காப்பான்’ இவர்களையும் இவர்களின் தமிழையும் ? என்று வேதனையுடன் வினவியுள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் நேற்று திரைப்படத்திற்கு சென்ற சூர்யா ரசிகர்கள் சிலர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாக சென்றுள்ளனர்.

அவர்களை புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, முன் அனுமதி வாங்காமல் இதுபோன்று ஊர்வலம் செல்லக் கூடாது, திரையரங்கில் பேனர் வைக்க கூடாது என்று அறிவுரை கூறியதோடு, இனி அவ்வாறு செய்யமாட்டோம் என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து கல்லூரியில் பயிலும் அந்த இளைஞர்கள், தமிழை தப்பும் தவறுமாக எழுதிக் கொடுத்துள்ளனர்.

அந்த கடிதத்தை மனதைத் திடப்படுத்திக் கொண்டுதான் படித்ததாகவும், படிக்கும்போது துக்கம் தொண்டையை அடைத்தது என்றும் தனது பேஸ்புக் பக்கத்தில் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே