தமிழகம் முழுவதும் இடியுடன் கனமழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலையில் லேசான மழை பெய்தது. நள்ளிரவில் குளிர்ந்த காற்று வீசிய நிலையில் அதிகாலையில் பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, காந்திநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வாகனங்கள் சாலையில் மெதுவாகச் சென்றன.

பெரம்பலூர், சிறுவாச்சூர், வாலிகண்டபுரம், திருமாந்துறை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது. மாணவ-மாணவிகளும், வேலை முடிந்து திரும்பியவர்களும் மழையில் நனைந்தவாறே சென்றனர்.

கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால் சம்பா மற்றும் தாளடி நெற் பயிரிடும் விவசாயிகள் மட்டுமின்றி காய்கறி பயிரிடும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

நாகை, திட்டச்சேரி, சிக்கல், கீழ்வேளூர்,வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சேலம், குமாரபாளையம், கரூர், சிவகங்கை, விழுப்புரம், தருமபுரி, தேனி, கந்தர்வக்கோட்டை ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே