சர்வதேச அளவில் ட்விட்டரில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
2009-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கை தொடங்கினார். தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 43லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 5 கோடியை தாண்டி உள்ளது.
இதன்மூலம் 10 கோடியே 80 லட்சம் பேர் பின்தொடரும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் 6 கோடியே 40 லட்சம் பேர் பின்தொடரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு பிறகு ட்விட்டரில் அதிகம் பேர் பின்தொடரும் பட்டியலில் மோடி 3-வது இடத்தை மீண்டும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் உலகளவில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவராக மோடி உள்ளார். அவரை 2 கோடியே 50 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள்.
அதிகபட்சமாக பிரதமர் அலுவலகத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் 3 கோடியே 70 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.
மேலும் பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தை 3 கோடியே 4 லட்சம் பேரும், மோடியின் பேஸ்புக் பக்கத்தை 4 கோடியே 48லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.