அதிபயங்கர டொரியன் புயல் தாக்கியதில் பஹாமா தீவில் உள்ள வீடுகள் சின்னாபின்னமாகின. ஏராளமான மக்கள் உடைமைகளை இழந்து தவித்து நிற்கின்றனர

கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த சக்திவாய்ந்த டொரியன் புயல், பஹாமாஸ் தீவை ஞாயிறு இரவு தாக்கியது. மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றில் சுமார் 13 ஆயிரம் வீடுகள் முற்றிலும் உருக்குலைந்தன. வெடிகுண்டு வெடித்த இடம் போல் வீட்டில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டு குப்பை கூளங்களாக கிடந்தன.

டொரியன் புயல் மேற்கு நோக்கி மணிக்கு ஒரு மைல் என்ற குறைந்த வேகத்தில் நகர்ந்தது. இதனால் செல்லும் இடங்களில் அனைத்தும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி பதம் பார்த்தது. மரங்கள், மின்கம்பங்களை பிடுங்கி வீசி எறிந்ததுடன், கார்களை அடையாளம் தெரியாமல் சிதைத்து விட்டது.

இதற்கு முன் இது போன்று ஒரு புயலின் தாக்குதலை சந்தித்தது இல்லை என்று பஹாமாஸ் பிரதமர் ஹூபெர்ட் மின்னிஸ் தெரிவித்தார். தயவு செய்து தங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று டுவிட்டரில் அவர் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கனமழை கொட்டியதால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. அபாகோ தீவுகளில் 8வயது சிறுவன் வெள்ள நீரில் மூழ்கி பலியானான். மற்றொரு சிறுமி காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அதிபயங்கர டொரியன் புயல் அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதி நோக்கி புயல் நகர்ந்து செல்கிறது. முன்எச்சரிக்கையாக புளோரிடா உள்பட 3 மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

டொரியன் புயல் பேரழிவை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைக்கும் என்று மியாமிலுள்ள தேசிய புயல் எச்சரிக்கை மைய அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். வீடுகளை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள் தேவையான உணவுகள், குடிநீர் போன்றவற்றை சில நாட்களுக்கு சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முன் எச்சரிக்கையாக புளோரிடாவுக்கு செல்ல இருந்த விமானங்கள், அங்கிருந்த வர இருந்த விமானங்கள் என 900க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

ஆர்லன்டோ மெல்போன் சர்வதேச விமான நிலையம் மற்றும போர்ட் லாடர்டேல் – ஹாலிவுட் சர்வதேச விமான நிலையங்களில் வர்த்தக விமான சேவை ரத்து செய்யப்பட்டு, முனையங்கள் மூடப்பட்டன. தெற்கு கரோலினாவை சேர்ந்த மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே