டெலிவரி பாய்களை ஏமாற்றும் சாப்பாட்டு கொள்ளையன்..! ஆண்பாவம் காலத்து டெக்னிக்

சென்னையில் ஆண்பாவம் பட பாணியில், உணவுக்கு ஆர்டர் கொடுத்து, வீடு தேடி வரும் டெலிவரி பாய்களிடம் செல்போனை நூதன முறையில் கொள்ளையடித்து விட்டு தப்பிச்செல்லும் சாப்பாட்டுக் கொள்ளையன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

ஆண்பாவம் காலத்து சீட்டிங் டெக்னிக்கை பயன்படுத்தி, சென்னையில் நூதன முறையில் செல்போன்களை கொள்ளை அடித்துச்செல்லும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின..

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்த அக்கரை பகுதியில் இருந்து ஒருவர் ஆன்லைனில் 1,100 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைன் உணவு சப்ளை செய்யும் சஞ்சய் என்பவர் ஆர்டர் செய்த முகவரிக்கு உணவை எடுத்து சென்றுள்ளார்.

அக்கரை பகுதியில் இருந்த அந்த நபரிடம் சென்று உணவை கொடுத்து பணம் கேட்டதற்கு கண்ணுக்கு தெரியும் தூரத்தில் உள்ள ஒரு வீட்டை காட்டி அது தன்னுடைய வீடுதான் என்றும் அங்கு பணம் பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

தனது செல்போன் ஸ்சுவிட்ச் ஆப் ஆகிவிட்டதாக கூறிய அந்தநபர், “உங்கள் செல்போனை கொடுத்தால் வீட்டில் உள்ளவர்களிடம் போன் செய்து பணம் கொடுக்க கூறுகிறேன், நீங்கள் அங்கு சென்று பணம் வாங்கிக் கொண்டு வரும் போது உங்கள் செல்போனை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

அதை நம்பிய டெலிவரி பாய் செல்போனை அந்த நபரிடம் கொடுத்து விட்டு அவர் கூறிய இடத்திற்கு சென்று பணம் கேட்டதற்கு இங்கு யாரும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யவில்லை என கூறியுள்ளனர்.

அதிர்ச்சிடைந்த டெலிவரிபாய், அந்த நபர் இருந்த இடத்திற்கு மீண்டும் வந்து பார்த்தபோது அவர் செல்போனுடன் மாயமானது தெரியவந்தது. செல்போனுடன் சாப்பாட்டையும் பறிகொடுத்த சஞ்சய் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதே போல உத்தண்டி நைனார் குப்பம் பகுதியில் உள்ள ரேவதி உணவகத்தில் 2160 ரூபாய்க்கு உணவு பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த உணவை சுப்பையா என்பவர் எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் அப்பன் ராஜ்குமாரிடம் உணவை கொடுத்துவிட்டு பணத்தை கேட்டபோது அருகில் உள்ள பெரியார் தெருவில் உள்ள கெஸ்ட் அவுஸ்சில் கொடுத்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறும், அவசரமா ஒருவரிடம் பேச வேண்டும் உங்களது செல்போனை தாருங்கள் பேசிவிட்டு தருகிறேன் என கூறி வாங்கியுள்ளார்.

தனது செல்போனை பேசுவதற்காக கொடுத்துவிட்டு அவர் கூறிய இடத்திற்கு சென்று உணவை கொடுத்து பணத்தை கேட்டபோது, அங்கு உணவு ஆர்டர் கொடுக்கவில்லை என்று கூறவே. திரும்பி வந்து பார்த்தால் அந்த நபர் செல்போனுடன் தலைமறைவாகியது தெரியவந்தது.

ஆர்டர் கொடுத்த நபர் தன்னை ஏமாற்றி செல்போனை நூதன முறையில் கொள்ளையடித்து சென்றதை தாமதமாக உணர்ந்தார். இச்சம்பவம் குறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் சுப்பையா புகார் அளித்தார்.

ஆன்லைன் உணவு சப்ளை செய்பவர்களிடம் நூதன முறையில் செல்போனை கொள்ளையடித்து வரும் நபர் வந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை கைபற்றிய நீலாங்கரை தனிப்படை போலீசார் சாப்பாட்டுக் கொள்ளையனைக் கைது செய்தனர்.

கடந்த ஒரு வருடமாக நூதன செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட அந்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதியை சேர்ந்த அப்பன் ராஜ்குமார் என்பதும், ஆத்தூர் பகுதியில் செக்யூரிட்டி மேலாளராகவும், மணல் சப்ளையராகவும் வேலைப்பார்த்ததும் தெரியவந்தது.

எம்.ஏ. பட்டதாரியான கொள்ளையன், அப்பன் ராஜ்குமாரின் தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது ஆன்லைனில் பழச்சாறு ஆர்டர் செய்துள்ளார். பழச்சாறு எடுத்து வந்த உணவகத்தின் ஊழியர் மறந்து வைத்து விட்டுச் சென்ற செல்போனை விற்றதில் பணம் கிடைத்துள்ளது.

அடுத்தடுத்து செல்போன்களை நூதன முறையில் கொள்ளையடித்து விற்பனை செய்து பணம் சம்பாதித்தது தெரியவந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு புகாரி மற்றும் சுவை ரெஸ்டாரண்ட்களில் இதுபோன்ற கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்ற உணவை வீடுகளுக்கு டெலிவரி செய்யச் செல்லும் இளைஞர்கள் இவர்களை போல மோசடி பேர்வழிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்..!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே