டெங்குவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

டெங்குவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெங்குவைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் பொது நல மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் டெங்குவைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டுமெனவும், டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்த உத்தரவுகள் பிறப்பித்து அவற்றை கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் டெங்கு பாதிப்புடன் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் வாயிலாக டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக மனுதாரர் குற்றம்சாட்டினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், நடைபாதைகளை விரிவுபடுத்தியது, வாகனங்களை நிறுத்தவா?? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது பொதுமக்களின் சமூக கடமை என சுட்டிக்காட்டினர்.

இதை அடுத்து, டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே