கடந்த வியாழக்கிழமை செயற்கைக்கோளை ஏவும் ஈரானின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

ஈரானின் வடபகுதியில் அமைந்துள்ள இமாம் கொமேனி விண்வெளி மையத்தில் செயற்கைக்கோள் உடன் ஏவமுயன்றபோது, ஏவுதளத்திலேயே ராக்கெட் வெடித்து சிதறியது. இதன்மூலம் இந்த ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக ராக்கெட்டை ஏவும் ஈரானின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இது தொடர்பாக செயற்கைகோளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியானது. இந்நிலையில் ஈரானின் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்த ஏவுதளத்தின் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

சஃபீர் எஸ்எல்வி ஏவுவதற்கான இறுதி கட்ட தயாரிப்புகளின் போது நிகழ்ந்த பெரும் சேதத்தை ஏற்படுத்திய விபத்துக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏவுதளத்தில் என்ன தவறு நடந்தது என்பதை ஈரான் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார். இதனிடையே டிரம்ப் வெளியிட்டவுள்ள புகைப்படம் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஈரான் வான்பரப்பில் அமெரிக்கா அத்துமீறி உளவு பார்ப்பதை இந்த புகைப்படம் வெளிப்படுத்தி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

டிரம்ப் பகிர்ந்த புகைப்படம் மிகவும் ரகசிய ஆவணங்களில் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்றும் உளவுத்துறையினர் அவரிடம் காட்டிய போது செல்போன் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப் பட்டிருக்கலாம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் கேமரா ஃப்ளாஸ் வெளிச்சமும், ஒரு ஆளின் உருவம் பதிவாகி இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

டிரம்ப்பின் ட்விட்டர் பதிவு அவர் வெளியிட்ட புகைப்படம், அது விமானம் அல்லது ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டதா செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப் படும் ரகசிய ஆவணபாதுகாப்பு அறையில் வைத்து காட்டப்பட்ட புகைப்படமா என்ற கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை பதில் அளிக்க மறுத்துவிட்டது. ஈரானுக்கு நேரடி செய்தியுடன், இந்த புகைப்படத்தை டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்டது ஏன், அந்த புகைப்படம் அவரே எடுத்ததா?? என்ற கேள்விகளுக்கும் வெள்ளை மாளிகை பதில் அளிக்க மறுத்துவிட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் புகைப்படம் இருந்ததால் வெளியிட்டதாகவும், அதற்கு தனக்கு முழு உரிமை இருப்பதாகவும் தெரிவித்தார். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் எனவும் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க எப்படி உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது வெளிப்பட்டு விடலாம் என்பதால் உளவுத்துறையின் நடவடிக்கைகளையோ, உளவுத்துறை திரட்டும் விபரங்களையோ அமெரிக்கா மிகவும் அரிதாகவே வெளியிடும்.

இந்நிலையில் அதிபர் டிரம்ப் வெளியிட்ட புகைப்படம் அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிடுவதாக அமைந்து விடலாம் எனவும் அந்நாட்டில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் ஒரு ரகசிய ஆவணத்தை பகிரங்கப்படுத்தும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு உண்டு என்றும் பொதுவாக உளவுதுறையினருடன் கலந்தாலோசித்த பிறகே அதிபர் இப்படிப்பட்ட விபரங்களை வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே