” டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைதான் ரஜினிக்கும் ஏற்படும்” – ஜெயக்குமார்

நடிகர் ரஜினி கட்சி தொடங்கினால் டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைதான் அவருக்கும் ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜிபி உலக தமிழ் சங்கம் சார்பில் தைவான் நாட்டிற்கு திருவள்ளுவர் சிலையை வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம் என கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் கட்சி துவங்க இருப்பதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “புதிய கட்சி தொடங்கி 5 சதவீத வாக்குகளை பெற்ற டிடிவி தினகரனுக்கு நேர்ந்த நிலைதான் ரஜினிக்கும் ஏற்படும்” என்றார்.

இந்துக்கள் என்ற உணர்வு நாம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என அதிமுக எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பேசியது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயகுமார், அதிமுக ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது என்றும் ரவீந்திரநாத் குமாரின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல என்றும் விளக்கமளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே