இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான எந்த கோரிக்கையையும் பிரதமர் மோடி முன்வைக்கவில்லை என மலேசிய பிரமதர் கூறியுள்ளார்.
மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டி மத நல்லிணக்கத்தை கெடுக்க முயற்சித்ததாக இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிந்து, அவரை தேடப்படும் நபராக இந்தியா அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வரும் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி, ரஷ்யாவில் நடந்த கிழக்கத்திய பொருளாதார கூட்டமைப்பின் போது, பிரதமர் மோடி மலேசியாவிடம் கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியாகின.
இதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோஹலேவும் உறுதி செய்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் மேற்கொண்டு தொடர்பு வைத்துக்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், மலேசியாவில் உள்ள ரேடியோ நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டு பிரதமர் மகாதீர் முகமது, இஸ்லாமிய போதகர் ஜாகீர் நாயக் மலேசிய நாட்டவர் அல்ல எனவும், மலேசியாவின் முந்தைய அரசால் நிரந்தர குடியுரிமை பெற்றவர் எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது இந்த மாத துவக்கத்தில் நடந்த சந்திப்பின் போது, ஜாகீரை நாடு கடத்துவது தொடர்பான எந்த கோரிக்கையையும் பிரதமர் மோடி தன்னிடம் முன்வைக்கவில்லை எனவும் கூறினார்.
இருப்பினும் நாயிக்கை பிற நாடுகளுக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுத்து வருவதாகவும், ஆனால் எந்த நாடுகளும் அவரை ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை எனவும் கூறிய அவர், மலேசியாவில் வாழும் சீனர்கள் குறித்து இனரீதியிலான கருத்து பதிவிட்ட பின் அவரை பொது மேடைகளில் உரையாற்ற அனுமதிப்பதில்லை என தெரிவித்தார்.