ஜம்மு – காஷ்மீர் மக்கள் அனைவரும் ஆதார் பதிவு பெறுவதை உறுதி செய்ய திட்டம்

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெறுவது தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் பணிகள் அக்டோபர் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த பின்னர் ஆதார் பதிவை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்பட்டு மற்ற மாநிலங்களைப் போலவே மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டது. எனவே அரசு வழங்கும் சலுகைகள் மானியங்கள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் தேவை என்பதால் அம்மாநில மக்கள் அனைவருக்கும் ஆதார் பதிவை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலவரப்படி 78 விழுக்காடு மக்கள் ஆதார் பதிவு பெற்று இருந்தாலும் சில பகுதிகளில் குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் மிக குறைந்த அளவிலான மக்களே ஆதார் பதிவு பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மையமாக வைத்தே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜம்மு-காஷ்மீர் முழுவதும் அடுத்த ஒரு வாரத்திற்குள் அதிகளவிலான பொது சேவை மையங்களை திறக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே