செல்போன் விற்பனையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது சாம்சங்

செல்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த தகவல் தொடர்பு, நிதி தொடர்பான சர்வதேச முன்னணி ஆய்வும் மற்றும் ஆலோசனை நிறுவனமான கார்டர் , நடப்பு நிதியாண்டின் இராண்டாவது காலாண்டில் ஏழரை கோடி செல்போன்களை சாம்சங் நிறுவனம் விற்பனை செய்ததாக கூறியுள்ளது. கடந்த 6 காலாண்டுகளாக தொடர்ச்சியாக விற்பனையில் பின்னடவை சந்தித்த நிலையில், இப்போது சாம்சங் முன்னிலை பெற்றுள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்சி ஏ வரிசை செல்போன்களின் விற்பனை சூடு பிடித்து உள்ளதும், குறைந்த மற்றும் நடுத்தர விலை ரகங்களின் விற்பனை நன்றாக இருப்பதும் சாம்சங் நிறுவனத்திற்கு கை கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இரண்டாவது காலாண்டில் செல்போன் விற்பனை 1.7 சதவிகிதம் சரிந்து மொத்தம் 368 மில்லியன் போன்கள் விற்பனையாகி உள்ளன என்றும், நடுத்தர மற்றும் குறைந்த விலை செல்போன்களின் விற்பனையை விட உயர்ந்தவிலை செல்போன்களின் விற்பனை மந்தமாகி உள்ளது என்றும் கார்டர் நிறுவனத்தின் மூத்த ஆய்வு இயக்குநர் அன்சுல் குப்தா கூறியுள்ளார்.

சாம்சங் நிறுவனத்தில் கேலக்சி எஸ் 10 செல்போன் விற்பனையும் மந்தமாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  செல்போன் விற்பனையை அதிகரிக்க புதிய, புதிய வசதிகளை செல்போன் நிறுவனங்கள் அறிமுகம் செய்வதாக கூறிய குப்தா, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 38 மில்லியன் செல்போன்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளது என்றும், இது கடந்த ஆண்டை விட 13.8 சதவிகிதம் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச அளவில் 101 மில்லியன் செல்போன்களை விற்பனை செய்து சீனா முதலிடத்தில் உள்ளது. ஆனாலும் இந்த கடந்த ஆண்டை விட 0.5 சதவிகிதம் குறைவு ஆகும் என்றும், இந்தியாவில் 35.7 மில்லியன் போன்கள் விற்பனையாகி உள்ளன என்றும், இது மொத்த விற்பனையில் 13.7 சதவிகிதம் என்றும்,கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 2.3 சதவிகித அளவுக்கு செல்போன் விற்பனை இந்தியாவில் குறைந்துள்ளது என்றும்  குப்தா தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே