ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களின் செல்போன் அழைப்புகளுக்கான ரிங்கிங் நேரத்தை 25 விநாடிகளாக குறைத்துள்ளன.
இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களின் அவுட்கோயிங் கால்களுக்கான ரிங்கிங் நேரம் 45 விநாடிகளாகும்.
ஆனால் இந்த வரம்பை மீறி ஜியோ நிறுவனம் தனது ரிங்கிங் நேரத்தை 20 விநாடிகளாக குறைத்தது.
இதனால் ஜியோ எண்ணுக்கு பிற நிறுவன எண்களிலிருந்து வரும் அழைப்புகள் 20 நொடிகளிலேயே நிறுத்தப்பட்டு, மிஸ்டு காலாக பதிவாகும்.
மிஸ்டு காலை பார்த்த பயனாளர் அழைப்பு வந்த எண்ணுக்கு மீண்டும் கால் செய்யும் போது அது இன்கமிங்க் அழைப்பாக மாறிவிடும்.
இன்கமிங் அழைப்பை பெற்ற நிறுவனம் இண்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணமாக நிமிடத்துக்கு 6 காசுகள் செலுத்த வேண்டும்.
இதனால் பெரும் இழப்பு ஏற்படுவதாகக் கூறிய ஏர்டெல் நிறுவனம் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராயிடம், ஜியோ நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்தது.
இதையடுத்து டிராய் வழங்கிய அறிவுறுத்தல்களின் படி ஜியோ நிறுவனம் தனது ரிங்கிங் நேரத்தை கடந்த வாரம் 20லிருந்து 25 விநாடிகளாக அதிகரித்தது.
ஆனாலும் இந்த நடவடிக்கை பிற நிறுவனங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. தாங்களும் ரிங்கிங் நேரத்தை குறைக்க நேரிடும் என ஏர்டெல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்த படி ரிங்கிங் நேரத்தை 25 விநாடிகளாக குறைத்துள்ளது. வோடபோன், ஐடியா நிறுவனங்களும் குறிப்பிட்ட வட்டாரங்களில் ரிங்கிங் நேரத்தை 25 விநாடிகளாக குறைத்துள்ளன.
வரும் 2020 ஜனவரி முதல் இண்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணத்தை ரத்து செய்வது குறித்து டிராய் ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.