சென்னை வந்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்த முதல்வர் பழனிசாமி

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், டெல்லி புறப்பட்ட பிரதமர் நரேந்திரமோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

அதில், கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 200 டிஎம்சி தண்ணீர் வழங்க ஜல்சக்தி அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கோதாவரி – காவிரி இணைப்பு திட்ட அறிக்கையை விரைவில் இறுதி செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை தூய்மைப்படுத்துவதற்கான தமிழக அரசின் நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் மத்திய அரசு 9927 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

கல்லணை கால்வாய் அமைப்பை நவீனப்படுத்த நிதி உதவி அளிக்க ஜல்சக்தி அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு திட்டத்தில் செயல்படுத்தப்படும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், திருத்தப்பட்ட முதல் கட்ட பணிக்கான நிதிக்கு அனுமதி மற்றும் இரண்டாவது கட்ட திட்டப்பணிக்கான ஒப்புதல் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார்.

ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூரில் அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கவும், நிபந்தனைகளை தளர்த்தவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளார்.

உடான் திட்டத்தின் கீழ் சேலம் – சென்னை இடையே காலையைப் போன்று மாலையிலும் விமானங்களை இயக்கவும், கோவை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தவும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்காமல் இருக்கும் 7825 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக விடுவிக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே