சென்னை வந்தது நடராஜர் சிலை..!

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை சென்னை வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைகுறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தியாக விளங்கிவந்த நடராஜர் சிலையை சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையர்கள் திருடிச்சென்றனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், இந்த சிலை திருட்டு வழக்கை விசாரணை செய்தனர்.

இதனிடையே, திருடுபோன அச்சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அடிலைடில் உள்ள ஆர்ட் கேலரி ஆப் சவுத் ஆஸ்திரேலியா எனும் அருங்காட்சியத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிலையை ஒப்படைக்க அருங்காட்சியக நிர்வாகம் ஒப்புக் கொண்டதையடுத்து, சிலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் டெல்லியிலிருந்து சிலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

மிகவும் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலைக்கு இசை வாத்தியங்களுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை என்றும், தமிழக அரசுக்கும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்சனை இருப்பதாகவும் பொன் மாணிக்க வேல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூரிலிருந்து 20சிலைகள் கொண்டுவர வேண்டி உள்ளதாக தெரிவித்தார்.

கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம் என்ற அவர், சிலைக் கடத்தல் வழக்குகளுக்கு தனது குழுவும் ஊடகங்களும் உதவியாக இருந்ததாகத் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவி செய்த அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல என்ற அவர், இன்னும் பல்வேறு சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளதாகவும் அனுமதி அளித்தால் எல்லா சிலைகளும் மீட்கப்படும் என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே