டி.என்.பி.எல். தொடரில் விளையாடி வரும் அணிகளில் ஒரு அணியை கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளை போன்று, தமிழகத்தில் டி.என்.பி.எல். என்ற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் இறுதிப்போட்டி கடந்த மாதம் நடைபெற்றது.
இறுதிப்போட்டி நடைபெற்ற நாளில், ஒரு அணியின் உரிமையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான வி.பி. சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், டி.என்.பி.எல் போட்டித் தொடரில் விளையாடிய அணிகளில் ஒரு அணியை கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த கேள்விக்கு சென்னை காவல்துறை வட்டாரங்கள் தரப்பில், தற்கொலை செய்து கொண்ட வி.பி. சந்திரசேகருக்கும், இதற்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தன. அதேநேரத்தில், சந்திரசேகரின் தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள், டெல்லி மற்றும் மும்பை காவல்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் சென்னை காவல்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
டி.என்.பி.எல். போட்டிகளில் சூதாட்டம் நடப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார் கடிதங்கள் வந்திருப்பதாகவும், இந்திய கிரிக்கெட் வாரியத்திலுள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் சென்னை காவல்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டன.
டி.என்.பி.எல். நிர்வாக குழு தலைவரான பி.எஸ். ராமன், போட்டித் தொடரில் முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்திருப்பதாகவும், அந்த புகாரைத் தொடர்ந்து, 3 பேர் கொண்ட குழுவை விசாரணை நடத்த அமைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.