சும்மா இருந்தவருக்கு அண்ணா பதக்கம்..! வெடித்தது புதிய சர்ச்சை

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஒன்றரை ஆண்டுகளாக எந்த பணியும் செய்யாமல் இருந்துவிட்டு, பொன்மாணிக்கவேல் மீது டிஜிபியிடம் புகார் அளித்த ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணாபதக்கம் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களான மன்னர் கால சிலைகளை வெளிநாட்டில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து காவல்துறைக்கு பெருமை சேர்த்துவரும் பொன் மாணிக்கவேலுவின் சிறப்பு புலனாய்வு குழுவில் ஏடிஎஸ்பியாக பொறுப்பில் இருந்த இளங்கோ மீது தான் இந்த புகார் எழுந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி முதல் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் வரை ஒன்றரை ஆண்டு காலம் சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் ஏடிஎஸ்பியாக இருந்த இளங்கோ, 2018 – 2019 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் எந்த ஒரு வழக்கையும் விசாரிக்கவோ, துப்பு துலக்கவோ இல்லை என்றும் பணியில் மிகவும் மெத்தனமாகவும் ஒழுங்கீனமாகவும் நடந்து கொண்டதாகவும் , ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்படவேண்டிய அசையா சொத்து விவர பட்டியலை கூட 8 ஆண்டுகளாக தாக்கல் செய்யவில்லை என்றும் 20 பக்க ஆண்டு இறுதி பணி ஆய்வு அறிக்கையில் இளங்கோவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை அப்போதைய காவல்துறை டிஜிபி ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது. ஆனால் இளங்கோ மீது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை..! அதே நேரத்தில் இளங்கோ தனது சக அதிகாரிகளை அழைத்துக் கொண்டு டிஜிபியை சந்தித்து சிலை கடத்தல் பிரிவு தலைமை அதிகாரியான பொன்மாணிக்கவேல் மீது சரமாரியான புகார்களை தெரிவித்தார்.

இதையடுத்து கடலோர காவல்படைக்கு மாற்றலாகிச்சென்ற ஏடிஎஸ்பி இளங்கோ , எந்த ஒரு மெச்ச தகுந்த பணியும் செய்யாத நிலையில் தற்போது அவருக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் மீது ஏசிஆர் என்று சுருக்கமாக சொல்லப்படும் ஆண்டு பணி ஆய்வு அறிக்கை விசாரணை நிலுவையில் இருக்கும் போது அதனை மறைத்து அவரது பெயர் விருதுக்கு பரிந்துரை செய்து இருப்பதாக சுட்டிக்காட்டி தமிழக காவல்துறை இயக்குனர் திரிபாதி, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி ஆகியோருக்கும் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள ராஜராஜ சோழன், லோகமாதேவி, நடராஜர் சிலைகளை வெளி நாடுகளில் இருந்து மீட்டு வந்த ஏ.டி எஸ்.பி ராஜாராம் போன்ற திறமையான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படாத அண்ணாபதக்கம், சும்மா இருந்த இளங்கோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக காவல்துறை வட்டார தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஏ.டிஎஸ்பி இளங்கோ, தன்மீதுள்ள புகாருக்கு டிஜிபியிடம் தக்க விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டதாகவும், 8 ஆண்டுகள் சொத்துவிவர அறிக்கை மட்டுமே தான் தாக்கல் செய்யவில்லை என்றும் அதையும் விரைவில் தாக்கல் செய்து விடுவேன் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே