பள்ளிக்கரணையில் கடந்த 12ஆம் தேதி சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து, விபத்தில் சிக்கி சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதுதொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திலும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவிலும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பேனர் வைத்த ஜெயகோபால் மீதும், பேனருக்கு இரும்புச் சட்டம் வழங்கிய அவரது உறவினர் மேகநாதன் மீதும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் கையில் எடுத்ததால், விசாரணை தீவிரம் அடைந்தது. ஜெயகோபாலும், மேகநானும் தலைமறைவாகி விட்டதால் அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
அச்சத்தில், இருவரது நண்பர்களும் உறவினர்களும் கூட தலைமறைவாகி இருந்தனர். அதில் ஒருவரான ஆப்ரகாம் என்பவரின் செல்போன் சிக்னலை, ஆராய்ந்ததில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள சொகுசு விடுதியில் ஜெயகோபால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், நேற்று அவரைக் கைது செய்தனர்.
சென்னை அழைத்து வரப்பட்ட அவரிடம் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுபிரிவு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் ஜெயகோபால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இதனிடையே பேனர் அமைக்க உதவிய ஊழியர்கள் 4 பேர் பள்ளிக்கரணை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடி கட்டுதல், பேனர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட பழநி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த ஆகிய 4 பேரை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.