சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு

அமெரிக்காவுடன் வர்த்தக போர் நீடித்து வரும் நிலையில், சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, எதிர்பார்ப்புக்கு மாறாக ஆகஸ்ட் மாதத்தில் 350 கோடி டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.

சீனாவின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, அன்னிய செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்தில் உயர்ந்து 3.10 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது.

சர்வதேச கரன்சி சந்தையில் நிலவிய ஏற்ற இறக்கத்தால், சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்தில் 400 கோடி டாலர் அளவுக்கு சரிவடையும் என்று பொருளதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், அதற்கு மாறாக உயர்வடைந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவின் அன்னியசெலாவணி சரிவடைந்து இருந்த நிலையில், சீன பங்குச்சந்தை மற்றும் பத்திரங்களில் செய்யப்பட்ட அன்னிய முதலீடுகளால் தற்போது உயர்ந்துள்ளது.

சீனா கையிருப்பில் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பும் ஆகஸ்ட் மாதத்தில் 9545 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்ததால், பதிலடியாக தனது நாணய மதிப்பை சீனா குறைத்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பு கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத விதத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 3.8 சதவீதம் அளவுக்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே