சிங்கப்பூருக்கு ஒப்பந்தப் பணிக்காக சென்று திரும்பும் வழியில் மரணம்

சிங்கப்பூருக்கு ஒப்பந்த பணிக்காக சென்று திரும்பும் வழியில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரின் உடலை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான பி.வில்சன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியிருந்த கடிதத்தில் சிவகங்கை மாவட்டம் சோமநாத மங்கலத்தைச் சேர்ந்த அருள்சாமி செங்கால் என்பவர் ஒரு ஒப்பந்த பணிக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டு கடந்த 27ஆம் தேதி திருச்சிக்கு விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது நடுவழியில் உயிரிழந்ததாகவும், இதனையடுத்து விமானம் இந்தோனேசியாவின் மேடன் நகருக்கு திருப்பப்பட்டு அவரது உடல் அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அருள்சாமியின் மரணத்தால் துயரத்தில் உள்ள அவரது மனைவி ரெஜினாமேரி மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அவரது இறுதிச் சடங்குகளுக்காக உடலை பெற காத்திருப்பதாகவும் எனவே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரத்தில் தலையிட்டு அருள்சாமியின் உடலை விரைவில் பெற்று அனுப்பி வைக்க இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கூறி இருந்தார்.

இதற்கு ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அருள்சாமியின் உடலை கொண்டுவருவதற்கான நடைமுறைகள் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். வரும் 31ஆம் தேதி அவரது உடலை விமானத்தில் கொண்டுவர விமானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுர் முகவர் தெரிவித்துள்ளதாகவும் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே