முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு துபாய் செல்ல உள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்டார்.
தமிழகத்தில் டெஸ்லா கார் தொழிற்சாலை தொடங்க வருமாறு அப்போது அவர் அழைப்பு விடுத்தார். டெஸ்லா நிறுவன அதிகாரிகள், அலுவலர்கள் முதலமைச்சருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
டெஸ்லா நிறுவனத்தை தொடர்ந்து ப்ளூம் எனர்ஜி என்ற மின்னுற்பத்தி நிறுவனத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து அவர் விமானம் மூலம் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக பல்வேறு தொழில் நிறுவனங்களை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்ததுடன், சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இந்நிலையில், இன்றுடன் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து துபாய் செல்கிறார். 8, 9 தேதிகளில் துபாயில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 10ஆம் தேதி முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்.