சந்திரயான் 2 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்டப்பாதை 3வது முறையாக வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலாவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக ஜூலை மாதம் 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், கடந்த 20 ஆம் தேதி முதல் நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் திட்டமிட்டபடி இன்று காலை 9 மணி 4 நிமிடங்களுக்கு 3வது முறையாக நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் சுற்றி வரும் உயரம் மாற்றப்பட்டது. 1190 விநாடிகள் நீடித்த இந்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது நிலாவில் இருந்து 179 முதல் 1412 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 2 விண்கலம் சுற்றி வரும்.
அடுத்தகட்டமாக வரும் 30 ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்தியான் 2 விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள விக்ரம் என்ற பெயர் கொண்ட லேண்டர் கலம், தனியாக பிரிந்து செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1 மணி 55 நிமிடத்தில் நிலாவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.