கோவை PSG மருத்துவ கல்லூரியிலும் மாணவர் சேர்க்கையில் ஆள்மாறாட்டம்

கோவை பி.எஸ்.ஜி. தனியார் மருத்துவக் கல்லூரியில், ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவரின் நீட் தேர்வு ஹால் டிக்கெட் புகைப்படங்கள் மீது சந்தேகம் எழுந்திருப்பதாக, மருத்துவக் கல்வி இயக்குநரகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக உதித் சூர்யா என்ற மாணவர் சிக்கினார்.

இது பூகம்பத்தைக் கிளப்பியதை அடுத்து, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு நீட் தேர்வில் சேர்ந்த மாணவர்களின் ஆவணங்களைப் பரிசோதிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் படித்து வரும் 150 மாணவர்களின் ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

அதில், சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து தேர்வு எழுதிய காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் நீட் தேர்வு ஹால் டிக்கெட் புகைப்படமும் தற்போதைய புகைப்படமும் ஒத்துப்போகவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதே மாதிரி தர்மபுரியை சேர்ந்த மாணவி ஒருவரின் ஹால் டிக்கெட்டில் புகைப்படமும் தற்போதைய புகைப்படமும் மாறுபட்டிருப்பது போல் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனை அடுத்து அந்த இருவரின் சேர்க்கையில் சந்தேகம் எழுந்திருப்பதாக, மருத்துவக் கல்வி இயக்குநகரத்திற்கு கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அந்தக் கல்லூரியின் முதல்வர் ராமலிங்கம், மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் ஒதுக்கி ஆணை கொடுத்தது தேர்வுக் குழு தான் என்று கூறினார்.

தேர்வுக்குழு கொடுத்துள்ள ஒதுக்கீட்டு ஆணையின் புகைப்படமும் மாணவர்களின் தற்போதைய புகைப்படமும் சரியாக இருப்பதாகவும், ஆனால் ஹால்டிக்கெட் புகைப்படம் தான் மாறுபட்டிருப்பது போல் தெரிவதாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக இருவரது பெற்றோரையும் அழைத்துப் பேசியதாகவும் குறிப்பிட்ட ராமலிங்கம், முறைகேடு நடைபெற்று இருக்கிறதா?? இல்லையா?? என்பதை தேர்வுக்குழு தான் நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

கைரேகைகளை கொண்டு சரிபார்ப்பதற்காக இருவரும் சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே