காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காவிரியில் 70 ஆயிரம் கனஅடிக்கும் மேலாக உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக உள்ளது. காவிரியில் நீர்வரத்து சீராக இருப்பதால், முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் இருந்தும் அதிகளவு நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120 புள்ளி 890 அடியாக உள்ளது. அணைக்கு 66 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், காவிரியில் 35 ஆயிரம் கன அடி வீதமும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி வீதமும், பாசனத்திற்காக கால்வாய்களில் வினாடிக்கு 1000 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

காவிரியில் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வருவதாலும், மேட்டூர் அணை நிரம்பி உள்ள நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிக அளவில் உள்ளதாலும், காவிரி பாயும் 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே