சென்னையில் காவல்துறையினருக்கு இணையாக கல்லூரி மாணவர்கள் தங்களை ரோந்து பணியில் ஈடுபடுத்திக் கொண்ட சம்பவம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருப்பதற்காக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள, மக்கள் பணி செய்ய ஆர்வமுள்ள இளைஞர்களை, காவல்துறையினருக்கு உதவிகரமாக இரவு பணியில் ஈடுபடுத்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
அதன் பேரில் லயோலா கல்லூரியை சேர்ந்த இளைஞர்களை இரவு காவல் பணியில் ஈடுபடுத்த கல்லூரி நிர்வாகத்திடம் உரிய ஒப்புதல் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து தங்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்ள தயாராக வந்திருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 30 பேரிடமும், உரிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் நுங்கம்பாக்கம் சரக காவல்துறை உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி வழங்கினார்.
ரூட்டு தல தான் கெத்து என நினைத்து தவறான பாதையில் பயணிக்கும் மாணவர்களுக்கு மத்தியில் காவல் துறையுடன் இணைந்து பொது மக்களுக்கு சேவை செய்ய முன்வந்துள்ள இந்த இளைஞர்களின் ஆர்வம் பாராட்டத்தக்கது என காவல்துறையினர் பெருமிதம் தெரிவித்தனர்.
பின்னர் தலா 10 நபர் ஒரு காவல் நிலையத்திற்கு உறுதுணையாக இருக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், நுங்கம்பாக்கம் , ஆயிரம் விளக்கு மற்றும் சூளைமேடு காவல் நிலையத்திற்கு தலா 10 பேர் என மொத்தம் 30 பேரும், 3 காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸாருடன் இணைந்து வாகனத் தணிக்கை, ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஆர்வத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.