தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காந்திஜெயந்தியை முன்னிட்டு பிளாஸ்டிக் மற்றும் மது ஒழிப்பு, சுகாதாரம் பேணுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பள்ளி மாணவர்கள் 25க்கும் மேற்பட்டோர் காந்தி வேடமிட்டு உச்சிபிள்ளையார் கோவில் அருகே உள்ள காந்தியின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பள்ளி ஆசியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும், தன்னார்வலர்களும் மரியாதை செலுத்தினர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
கடற்கரையில் கிடந்த கழிவு பொருட்களை ஆட்சியர் சேகரித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தன்னார்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தலைமையில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை சேவை, பிளாஸ்டிக் மற்றும் மது ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழை சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், துணை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
அவர்கள் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகள் ஏந்தியவாறு 10 கிலோமீட்டர் தூரம் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காந்திமண்டபத்தில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியையும், சாலையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருள்களை அகற்றும் பணியையும் தொடங்கி வைத்தார்.
இதில் திரளான கல்லூரி மாணவ-மாணவிகள் 3 குழுக்களாக பிரிந்து பிளாஸ்டிக் பொருள்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.