கல்லூரி மாணவர் ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர், ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் சந்தையடியூர் தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் அபிமணி. இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இன்று வழக்கம் போல் மதிய உணவிற்காக அருகில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். செய்துங்கநல்லூர் ரயில்நிலையம் அருகே சென்ற போது இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த கும்பல் அவரை வழிமறித்தது.

முதுகிற்குப் பின்னாலும், இருசக்கர வாகனங்களிலும் வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்திகளை அந்தக் கும்பல் எடுக்கவே பதறிப் போன அபிமணி, இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். விடாமல் துரத்திய கும்பல், ஒரு கட்டத்தில் அபிமணியைச் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

தலையில் சரமாரியாக வெட்டு விழவே ரத்த வெள்ளத்தில் சரிந்த அபிமணி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அபிமணி உயிரிழந்தை உறுதி செய்த பிறகே கொலைக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொலை குறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் துரிதப்படுத்தினார். கல்லூரி அருகே பட்டப் பகலில் நடந்த இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே