கனரா வங்கி ஏடிஎம்மில் ரூபாய் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் மொபைல் எண்ணிற்கு ஓடிபி (OTP) அனுப்பி அதை திருப்பி பதிவு செய்த பிறகே பணம் எடுக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.
தமிழக அளவில் அந்த வங்கியின் கிளை மேலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கனரா ஏடிஎம்மில் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் மொபைல் போன் கையில் இருக்க வேண்டும் எனவும் விரைவில் இது அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல ஸ்டேட் வங்கியில் ஏடிஎம் மூலமான பண பரிவர்த்தனைகளை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவந்து மொபைல் ஆப் மூலம் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் அனைத்து பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குனர்கள், தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவது, சிறு குறு தொழில் நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் கடன் வழங்குவது, பணமில்லா பரிவர்த்தனையில் பாதுகாப்பு குறைபாடுகளை களைதல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஐஓபி வங்கி நிர்வாக அதிகாரி சுவாமிநாதன் தெரிவித்தார்.