விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை என்று கூறியுள்ள இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் 2 திட்டத்தின் குறிக்கோள்கள் 98 விழுக்காடு நிறைவேறி விட்டதாக தெரிவித்துள்ளார். ககன்யான் திட்டத்திற்கே இனி முன்னுரிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரயான் 2- விண்கலத்தின் விக்ரம் லேண்டரை, கடந்த 7ஆம் தேதி அதிகாலை நிலவில் தரையிறக்கும் முயற்சி நடைபெற்றது. அப்போது, விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி தொடர்ச்சியாக படும் 14 நாட்களுக்குள், அதாவது நிலவில் ஒரு பகல் பொழுதுக்குள் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க இஸ்ரோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
லேண்டர் விக்ரம் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இந்த காலகட்டத்திற்குள் தகவல் தொடர்பை மீட்டமைக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த அவகாசம் வெள்ளிக் கிழமையுடன் முடிவடைந்து விட்டதால், இனி நிலவின் தென்துருவத்தில் இரவுப் பொழுதாகி சூரிய ஒளி கிடைக்காது.
இதனால் லேண்டர் இயங்குவதற்கு தேவையான சக்தி கிடைக்காது என்பதோடு, நிலவின் தென்துருவத்தில் கடுங்குளிர் நிலவும்.
நிலவில் இரவுப் பொழுதும், பூமியில் 14 நாட்களுக்கு சமமாகும். எனவே, 14 நாட்களுக்குப் பிறகு, லேண்டர் விக்ரமின் நிலை எப்படி இருக்கும் என்பது உறுதிபடத் தெரியாது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், லேண்டருடனான தகவல் தொடர்பை இதுவரை மீட்டமைக்க முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அதில் உள்ள 8 கருவிகளும் அவற்றிற்குரிய பணியை துல்லியமாக செய்து வருவதாகவும் சிவன் கூறியுள்ளார்.
விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருவதாகவும் சிவன் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டுக்குள்ளாக ககன்யான் திட்டத்தை முடிப்பதற்கான இலக்கை நிர்ணயிக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சந்திரயான் 2-ன் அறிவியல் சார்ந்த குறிக்கோள்கள் முழுவதும் பூர்த்தி அடைந்து விட்டதாகக் கூறிய சிவன், தொழில்நுட்பம் சார்ந்த குறிக்கோள்களில் 100 விழுக்காட்டை நெருங்கி விட்டதாகத் தெரிவித்தார். அதன் காரணமாகவே இத்திட்டம் 98 விழுக்காடு வெற்றி அடைந்து விட்டது என்று தாம் குறிப்பிடுவதாக சிவன் விளக்கமளித்தார்.