சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்தில் பயணித்தபோது நடத்துநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர், செவ்வாய் கிழமை இரவு சென்னை கோயம்பேட்டியில் இருந்து மன்னார்குடி வழியாக கும்பகோணத்திற்கு சென்ற அரசு விரைவு பேருந்தில் பயணித்துள்ளார்.
இரவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணிற்கு அரசு பேருந்து நடத்துநர் ராஜூ பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் தவறாக நடக்க முயன்ற நடத்துநரின் கன்னத்தில் அறைந்ததுடன் எச்சரித்தும் உள்ளார்.
அதற்கு, காவல்நிலையத்தில் புகார் அளித்தால் அளித்துக்கொள் என நடத்துநர் ராஜூ அலட்சியமாக பதிலளித்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக பணி இடை நீக்கம் செய்யப்பட்ட நடத்துநர் ராஜூ தற்போது பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.