ஐநா.சபையில் மகாத்மா காந்தி 150வது பிறந்த நாள் கொண்டாட்டம்

மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளை ஐநா.சபை கொண்டாடியது.

நியுயார்க்கில் ஐநா.தலைமை அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் பெயரால் சூரிய சக்தி பூங்காவை பிரதமர் மோடி, வங்காள பிரதமர் ஷேக் ஹசினா, தென்கொரிய அதிபர் மூன் ஜே உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

மகாத்மாவின் நினைவாக ஐநா.சபை சிறப்பு தபால் தலை ஒன்றையும் வெளியிட்டது.

சமகால உலகில் காந்தியின் பங்களிப்பு என்ற பெயரில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார்.

இத்தகைய சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஐ.நா.சபைக்கு மோடி நன்றி பாராட்டினார். தம்மை சந்தித்திராத பலரது வாழ்க்கையிலும் காந்தியடிகள் மிகப்பெரிய ஊக்கசக்தியாக இருந்தார் என்று குறிப்பிட்ட மோடி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களின் கொள்கைகள் காந்திய சித்தாந்தத்தில் இருந்து வடிவம் பெற்றதாக குறிப்பிட்டார்.

தமது வாழ்க்கையின் மூலம் யாரையும் ஆட்கொள்ள காந்தி எண்ணியதில்லை என்ற போதும் அனைவருக்கும் ஊக்கசக்தியாக விளங்கினார் என்று மோடி குறிப்பிட்டார்.

இவ்விழாவில் பேசிய ஷேக் ஹசினா மகாத்மா காந்தியை தேசபக்தர் என்றும் துறவி என்றும் புகழ்ந்தார்.

வங்க தேச தலைவர் ஷேக் முஜிப்பின் கொள்கைகளும் காந்தியடிகளால் உருவம் பெற்றன என்று கூறிய ஷேக் ஹசீனா, பாகிஸ்தான் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய வங்காள மக்களை பாதுகாக்கவே 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் யுத்தம் தொடங்கியதாக நினைவு கூர்ந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே