ஐஐடியில் படிப்பில் பலவீனமாக இருக்கும் மாணவர்களை ஒரு இளநிலை அறிவியல் பட்டப் படிப்புடன் முன்கூட்டியே வெளியேறும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் JEE மெயின் தேர்வுக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பித்தாலும், நாட்டில் உள்ள 23 ஐஐடிக்களில் 13 ஆயிரத்து 500 பேர் தான் சேர்க்கை பெறுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத் தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 461 மாணவர்கள் சரிவர படிக்காததாலும், கடினமான பாடங்களின் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் அவர்கள் பாதியிலே படிப்பைக் கைவிடும் நிலை ஏற்படுகிறது.
பொதுவாக பி.டெக்., படிப்புக்களுக்கு 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் 3 ஆண்டுகளிலேயே படிப்பை நிறுத்திக் கொண்டு வெளியேறுவோருக்கு பி.எஸ்.சி., எஞ்சினியரிங் பட்டம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக ஐஐடியின் கவுன்சில் தீர்மானிக்கும் குறைவான கல்வி கற்கும் திறன் இருப்பவர்களை மட்டுமே 2-வது பருவம் முடிந்த பின் 3-ம் ஆண்டோடு வெளியேறும் வாய்ப்பு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து ஆலோசிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் ஐஐடி கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.