காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ராமகிருஷ்ணாமிஷன் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிச் செல்லும்போது தீ விபத்து ஏற்பட்டு 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு கடந்த மாதம் 30ஆம் தேதி 3 பள்ளிகள் ஒன்றிணைந்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தியுள்ளன. போட்டி தொடக்கத்தின்போது அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த விக்னேஷ் என்கிற மாணவரிடம் ஒலிம்பிக் தீபத்தைக் கொடுத்து மைதானத்தைச் சுற்றி ஓட விட்டுள்ளனர்.
அந்த தீப்பந்தத்துக்கு எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மாணவர் ஓடும்போது காற்றின் வேகத்தில் தீ அவர் மீது பட்டு உடல் முழுவதும் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
சுற்றி இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். அங்கு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ், சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தீப்பந்தத்தில் மண்ணெண்ணைக்கு பதிலாக ஆபத்தான பெட்ரோலை பயன்படுத்தியது, மாணவருக்கு முறையான பயிற்சி அளிக்காமல் தீப்பந்தத்தை அவர் கையில் கொடுத்தது, தீயணைப்பானை தயார் நிலையில் வைக்காதது என பள்ளி நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளி தரப்பில் கேள்வி எழுப்பியபோது, உரிய பதிலளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.