சென்னை அம்பத்தூர் முருகன் இட்லி கடையின் உற்பத்தி மையத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முருகன் காபி நிலையம் என்று 1991ல் மதுரையில் தொடங்கப்பட்ட கடைதான் முருகன் இட்லி கடை. அதன்பின் முருகன் இட்லி கடை என்று பெயர் மாற்றப்பட்டு தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது.
மிகவும் பிரபலமான இந்த உணவகத்திற்கு சென்னையில் 17 கிளைகள் உள்ளது. அதேபோல் மதுரையில் 3 மற்றும் சிங்கப்பூரில் இரண்டு கிளைகள் உள்ளது.
இந்த நிலையில்தான் சென்னை அம்பத்தூர் முருகன் இட்லி கடையின் உற்பத்தி மையத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறை சோதனையை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அம்பத்தூர் முருகன் இட்லி கடை என்பது உணவு தயாரிக்கும் மையம் ஆகும். இங்கிருந்து சென்னையில் இருக்கும் பல முருகன் இட்லி கடைகளுக்கு உணவுகள் எடுத்து செல்லப்படுகிறது. அதேபோல் உணவு தயாரிக்க தேவையான பொருட்கள் இங்கிருந்து எடுத்து செல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்த முக்கியமான உற்பத்தி கூடத்திற்குத்தான் தற்போது சீல் வைத்து இருக்கிறார்கள்.
சென்னை பாரிமுனையில் முருகன் இட்லி கடை ஒன்று இருக்கிறது. இந்த கடையில் உள்ள உணவில் புழு இருந்துள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறைக்கு வாடிக்கையாளர் ஒருவர் மூலம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து முருகன் இட்லி கடைகளிலும், அதன் உற்பத்தி மையங்களிலும் அதிரடி சோதனை நடந்தது. இதையடுத்து தற்போது உற்பத்தி கூடத்திற்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தற்காலிக தடை என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக முருகன் இட்லி கடையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன்பின் தடை மீதான முடிவு எடுக்கப்படும்.