ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை எல்ஐசி காப்பீட்டு நிறுவனம் வாங்கியிருக்கும் நிலையில், ஐடிபிஐ வங்கியின் பங்குகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது. எல்ஐசியில் மக்கள் செலுத்தி கொண்டிருக்கும் காப்பீடு தொகையில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் லட்சக்கணக்கான மக்கள் பாலிசி எடுத்து காப்பீட்டு தொகையை செலுத்தி கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 30 கோடி பேர் எல்ஐசியில் பாலிசி எடுத்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலிசிதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பிரீமியம் தொகையை வைத்து எல்ஐசி நிறுவனம் கடன் பத்திரங்களிலும் பல நிறுவனங்களின் பங்குகளை பெறுவதிலும் முதலீடு செய்து வருகின்றது. அப்படி முதலீடு செய்தால் மட்டுமே மக்கள் செலுத்தும் காப்பீட்டு தொகையை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு வட்டியுடன் எல்ஐசியால் திரும்ப மக்களிடம் கொடுக்க முடியும்.
ஆனால் எல்ஐசி முதலீடு செய்து இருக்கும் சில நிறுவனங்கள் திவால் ஆகி வருவதால் ஏற்கனவே சிக்கல்கள் எழுந்தன. இந்த நிலையில்தான் தொழில் வளர்ச்சிக்கு கடன்களை வழங்கும் பொதுத்துறை வங்கியாக இருந்து வந்த ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை எல்ஐசி கடந்த ஜனவரி மாதம் ரூபாய் 21600 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
கடந்த 5 வருடங்களாக ஐடிபிஐ வங்கி இழப்பை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் 2018 19 நிதி ஆண்டு வரை சுமார் 15,000 கோடி இழப்பை ஐடிபிஐ வங்கி சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி ஐடிபிஐ வங்கி இந்த நிதியாண்டின் ஜூன் மாதம் வரையில் மட்டுமே கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 800 கோடி இழப்பை சந்தித்து உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் ஐடிபிஐ வங்கியின் பங்கு சந்தை மதிப்பு கடுமையாக குறைந்துள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் 62 ரூபாயாக இருந்த ஐடிபிஐ பங்கு விலை இன்றைய தேதிக்கு 26 ரூபாயாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கும் மக்கள் செலுத்திய காப்பீட்டு தொகைகளுக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கும்போது, நம் காப்பீட்டு தொகைகள்தான் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்குவதற்கான முதலீடுகளாக மாறியது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
முதலீடு செய்த நிறுவனங்களின் பங்கு சந்தை விலை குறையும்போது இந்த நிறுவனங்களால் எல்ஐசிக்கு கிடைக்கும் லாபமும் கடுமையாக குறையும். லாபம் குறைந்தால் எப்படி மக்களின் காப்பீட்டு தொகையை திரும்ப செலுத்த முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பங்கு சந்தை முதலீட்டில் ஏற்ற இறக்கங்கள் என்பது சகஜமான ஒன்று என்றும் எல்ஐசி முன்னூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் போது ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் சரிந்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி ஆண்டுதோறும் ஒன்றிலிருந்து ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் எல்ஐசிக்கு இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகின்றது.