இஸ்ரோவில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த 2 வகையான கூடுதல் ஊதிய உயர்வுகளை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக பத்திரிகை ஒன்றில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை துணை செயலர் எம். ராம்தாஸ் கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ உத்தரவு குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
அதில் 6ஆவது மத்திய ஊதிய ஆணையத்தின் பரிந்துரை மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில், அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் வரையில் ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்வது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, SD, SE, SF, SG நிலையிலான விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் கூடுதல் ஊதிய உயர்வுகளை நிறுத்திக் கொள்ளும்படி விண்வெளித் துறைக்கு மத்திய நிதியமைச்சகம், செலவீனத் துறை ஆகியவை அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுரையின்படி, 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 2 வகையான கூடுதல் ஊதிய உயர்வுகளும் நிறுத்தப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாதத்துக்கு சராசரியாக 10 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் குறையும் என மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த கேள்விக்கு இந்திய விண்வெளி பொறியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் கே. சந்தோஷ், உள்விவகாரம் எனத் தெரிவித்து, கருத்து கூற மறுத்து விட்டார்.
எனினும், அந்த சங்கத்தின் தலைவர் ஏ. மணிமாறன் சார்பில், மத்திய அரசை சமாதானம் செய்து, கூடுதல் ஊதிய உயர்வுகளை நிறுத்தும் முடிவை திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என இஸ்ரோ தலைவர் கே. சிவனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ஊதிய உயர்வுகளை நிறுத்துவது தொடர்பான முடிவால், இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் இடையே அதிருப்தி நிலவுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது