இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்

தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி,பாலக்கோடு உள்ளிட்ட இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், எரியோடு கோவிலூர் குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் விடிய விடிய சாரல்மழை பெய்தது. இதனால் பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனத்தாலும், மேற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியாலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே