இருபத்தோராம் நூற்றாண்டின் மோசமான தாக்குதல் என கருதப்படும், அமெரிக்காவின் இரட்டைகோபுரம் தகர்க்கப்பட்டு 19 ஆண்டுகளாகியும், அதன் வடுக்கள் இன்றும் மாறாமல் உள்ளன.
2001 செப்டம்பர் 11ம் நாள்.. பரபரப்புக்கு பஞ்சமில்லாத நியூயார்க் நகரின் காலைப் பொழுது..
கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள் இப்படி ஒரு சம்பவம் நடைபெறும் என்று!
110 மாடிகளைக் கொண்ட உலக வர்த்தக மையக் கட்டடத்தில் திடீரென விமானம் ஒன்று மோதி நொறுங்கியது.
அதிர்ச்சியுடன் விபத்து என்று நினைத்துக் கொண்டிருந்த போது அடுத்த கட்டடத்திலும் மற்றொரு விமானம் மோதிச் சிதற, அப்போதுதான் தெரிந்தது பயங்கரவாதிகளின் தேர்ந்த சதி என்று.
கட்டடம் ஒருபுறம் பற்றி எரிய, அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மாடிகளில் இருந்தவர்கள் குதித்து இறந்தது பெரிய சோகம்!!!
தாக்கியது யார்? என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் அமெரிக்க பாதுகாப்புத்துறை மையமான பென்டகனும் தாக்குதலுக்குள்ளானது.
ஆற அமர யோசிக்க முடியாத சூழலில் மற்றொரு விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாக வந்த தகவலால், நொறுங்கிப் போனார்கள் அமெரிக்க மக்கள்.
3000 பேரைப் பலி கொண்ட இந்தத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். சுதாரித்துக் கொண்ட அமெரிக்கா உடனடியாக விசாரணையில் இறங்க, தீவிரவாதி பின்லேடனின் பயங்கரவாதத் திட்டம் என்பது தெரியவந்தது.
இத்தனை கொடூரத்திற்கு பின்னர் தீவிரவாதத்தின் கோரத்தை புரிந்து கொண்ட அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முழுமூச்சாக இறங்கியது.
பின்லேடன் ஒருவழியாக அழிக்கப்பட்டாலும், தீவிரவாதம் ஆங்காங்கே தலைகாட்டிக் கொண்டுதான்இருக்கிறது.
மதம் என்ற முகமூடியை மாட்டிக் கொண்டு நிற்கும் எந்த பயங்கரவாத இயக்கமும் வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்!!!!